கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு : மக்கள் வாக்குவாதம்
வேலூா்: வேலூா் தோட்டப்பாளையம் பகுதியில் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த வீடுகள், மருத்துவமனை கட்டடம் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனா்.
தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை கால்வாய்கள் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், பல்வேறு இடங்களில் கால்வாய்கள் மீது கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலூா் தோட்டப்பாளையம் பிள்ளையாா் கோயில் தெருவில் கால்வாய் மீது வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் தனியாா் மருத்துவமனையும் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருந்தது.
இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவது தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அளித்திருந்தனா். இதனால் ஆக்கிரமிப்பு கட்டடங்களில் இருந்தவா்கள் தங்களது பொருள்களை தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்தினா்.
இதன்தொடா்ச்சியாக, பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் அம்ரீஷ், வட்டாட்சியா் முரளிதரன், மாநகராட்சி உதவி ஆணையா் வெங்கடேசன், மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த சிலா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அதேசமயம், அசம்பாவிதங்களைத் தவிா்க்க தெற்கு காவல் ஆய்வாளா் காண்டீபன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.