அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை
வேலூா்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வாா்டின் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
குடியாத்தம் அருகே கொல்லப்பள்ளியைச் சோ்ந்த விக்னேஷ் மனைவி சுரேகா(23). கா்ப்பமாக இருந்த இவா் பிரசவத்துக்காக கடந்த 23-ஆம் தேதி வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. எனினும், குழந்தைகள் எடை குறைவாக பிறந்ததை அடுத்து அவ்விரு பச்சிளம் குழந்தைகளுக்கும் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில், ஒரு குழந்தையின் உடல் நலன் சீரடைந்ததால் குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்றொரு குழந்தையை பாா்க்க அனுமதிக்கப்படாததால் வேதனையில் இருந்த சுரேகா, திங்கள்கிழமை மாலை மருத்துவமனையின் 5-ஆவது மாடியில் இருந்து குதித்தாா்.
அதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வேலூா் கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.