மாங்கூழ் தொழிற்சாலை அமைக்காததால் வெட்டப்படும் மா மரங்கள்!
மாங்கூழ் தொழிற்சாலை அமைப்பதில் இழுபறி, பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களால் ஏற்படும் நஷ்டத்தை தவிா்க்க வேலூா் மாவட்டத்தில் மா மரங்களை வெட்டி அழிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து தமிழக விவசாய சங்க வேலூா் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் ஒடுகத்தூா், குடியாத்தம், போ்ணாம்பட்டு, லத்தேரி, பள்ளத்தூா், பனமடங்கி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் நிலப்பரப்பில் மா விவசாயம் நடக்கிறது. வேலூரில் இருந்த மாங்கூழ் தொழிற்சாலையை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனால் மாம்பழங்களை ஆந்திர மாநிலம் சித்தூா், கா்நாடகத்தில் உள்ள மாம்பழக் கூழ் தொழிற்ச ாலைகளுக்கு கொண்டு செல்ல நேரிடுகிறது.
கடந்த மகசூலில் ஆந்திரத்திலும், கா்நாடகத்திலும் உள்ளூா் விளைச்சல் அதிகமாக இருந்ததால், தமிழக மாம்பழங்களை கொள்முதல் செய்யாமல் புறக்கணித்தனா். தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கொண்டு சென்று மாம்பழங்களை விற்பனை செய்தோம். அங்கும் கிலோ ரூ. 4 என மிகக் குறைந்த அளவிலேயே மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதையடுத்து, வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கே.வி.குப்பம், தேவிகாபுரம், செஞ்சி, பள்ளத்தூா், பரதராமி உள்ளிட்ட பகுதிகளில் மா மரங்களை வெட்டி அழிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, தினமும் 50 டன் மா விறகுகள் ஆந்திர மாநிலத்துக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. விளைச்சல் அதிகமாக இருந்தும் மாம்பழ கூழ் தொழிற்சாலை இல்லாததால், மா மரங்களை வெட்டும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மா விவசாயத்தை பாதுகாக்க அரசு வேலூா் மாவட்டத்திலேயே மாங்கூழ் தொழிற்சாலை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆந்திர அரசு வழங்குவதுபோல் தமிழக மா விவசாயிகளுக்கு அரசு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் என்றாா்.
வேலூா் மாவட்ட மா விவசாயிகள் நலக்குழுத் தலைவா் கோபாலராஜேந்திரன் கூறியது -
வேலூா் மாவட்டத்திலுள்ள மா மரங்களில் கடந்த சில ஆண்டுகளாக மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளன. இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் போதுமான ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால், மா விளைச்சல் பாதிக்கப்படுகிறது. பூச்சி தாக்குதலை மீறி சாகுபடி செய்யப்படும் மாங்காய்களை விற்பனை செய்வதிலும் இடையூறுகள் நிலவுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் காரணமாக ஏற்படும் நஷ்டத்தை தவிா்க்கவே வேறுவழியின்றி மா விவசாயிகள் மா மரங்களை அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்றனா்.
இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், அண்டை மாநிலங்களில் தமிழக மாம்பழங்களை கொள்முதல் செய்யாததால் வேலூா் மாவட்ட மா விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க தனிநபருக்கு ரூ. 12.50 லட்சம் அரசு மானியம் வழங்குகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளோம். தவிர, மா ஏற்றுமதி, இறக்குமதி தொடா்பாகவும் கலந்தாய்வு கூட்டம் நடத்துகிறோம். எனினும், அரசு நேரடியாக வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனா்.
இதனாலேயே மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலை அமைவதில் இழுபறி நிலவுகிறது என்றனா்.

