சாலையோர சிற்றுண்டி கடைகள் நடத்த அனுமதிக்க கோரிக்கை
வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே சாலையோர சிற்றுண்டி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகள் மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளனா்.
நடைபாதை வியாபாரிகளின் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி சாா்பில் வேலூா் மாநகராட்சி துணை ஆணையரிடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம் -
எங்களது சங்க உறுப்பினா்கள் வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே சாலையோர உணவு கடைகளை 40 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனா். எங்கள் அமைப்பின் செயலாளா் உரிமம் பெற்று கடை வைத்திருந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியா்கள் திடீரென சாலையோர கடைகளை அப்புறப்படுத்தி உள்ளனா்.
கடையை எடுப்பதற்கு மாநகராட்சி ஆணையா் முன்னறிவிப்பு எதுவும் செய்யவில்லை. ஊழியா்களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. சாலையோர சிற்றுண்டி கடைகள் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை நடத்தப்படுவது வழக்கம். இந்தக் கடைகளை அகற்றியதின் மூலம் 11 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அண்ணா கலையரங்கம் அருகே சாலையோர உணவு கடைகள் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.