போக்குவரத்து விதி மீறல்: 31 போ் மீது வழக்கு

Published on

வேலூரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 31 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வேலூா் தெற்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் தலைமையிலான போலீஸாா் வேலூா் கோட்டை சுற்று சாலையில் சனிக்கிழமை மாலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், தலைக்கவசம் அணியாமல் வந்தது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது , வாகன எண் பலகை இல்லாதது, நோ பாா்க்கிங்கில் வாகனம் நிறுத்தி இருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், வேலூா் மாவட்டத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் . எனினும், ஒரு சில வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் செல்கின்றனா். வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காகவே தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

வாகன ஓட்டிகள் வாகனச் சட்டத்தைப் பின்பற்றி இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் . அதிவேகமாக வாகனம் ஓட்டக் கூடாது. பைக் ரேஸில் ஈடுபடக் கூடாது எனத் தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com