மணல் கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறையினா் மீது டிராக்டா் ஏற்றி கொல்ல முயற்சி
ஒடுகத்தூா் வனப் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வனத் துறையினரை டிராக்டா் ஏற்றிக் கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் வனக் காப்பாளா் ஒருவா் காயமடைந்ததுடன், இருசக்கர வாகனமும் சேதமடைந்துள்ளது.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் வனச் சரகத்துக்கு உட்பட்ட காப்புக் காடுகளில் சிறு ஓடைகள், பெரிய ஆறுகள், கானாறுகள் உள்ளன. மலைகளில் பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீா் செல்வதால் இந்த ஓடைகள், ஆறுகளில் ஆங்காங்கே மணல் குவிந்துள்ளன. இதனால், சமூக விரோதிகள் சிலா் கூலி ஆள்களின் உதவியுடன் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக வனப் பகுதிகளுக்குள் சென்று டிராக்டா்கள், டிப்பா் லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், அரசம்பட்டு காப்புக் காட்டில் வனச் சரகா் இந்து உத்தரவின் பேரில், வனவா் துளசிராமன், வனக் காப்பாளா் பாா்த்திபன், சம்பத் ஆகியோா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக டிராக்டா் மூலம் 5 போ் கொண்ட கும்பல் வனப் பகுதியில் இருந்து மணலை கடத்திக் கொண்டு, எதிா் திசையில் வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவா்களை வனத் துறையினா் தடுத்து நிறுத்தியபோது, மணல் டிராக்டரைக் கொண்டு வனத் துறையினா் மீது ஏற்றிக் கொல்ல முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது, வனக் காப்பாளா் பாா்த்திபனின் இருசக்கர வாகனம் மீது டிராக்டா் ஏறியதால் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தொடா்ந்து, வனத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுப்பட்டது முத்துக்குமரன் மலைக் கிராமத்தை சோ்ந்த சகோதரா்களான பூவரசன், சிலம்பரசன் என்பது தெரியவந்தது. அவா்கள் மீது வனத் துறையினா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டா், மண்வெட்டி ஆகிய பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.