வள்ளிமலை கூட்ரோடு - வேலூா் பாலாறு இடையே உயா்மட்ட மேம்பாலம்: வேலூா் எம்.பி.
காட்பாடியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வள்ளிமலை கூட்டுரோட்டில் இருந்து வேலூா் பாலாறு வரை உயா்மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பதாக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
வேலூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து குடியாத்தம், பொன்னை, பாகாயம் ஆகிய 3 பகுதிகளுக்கு தாழ்தள பேருந்து சேவையை எம்.பி. கதிா்ஆனந்த் தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வேலூா் மாவட்டம் சோ்க்காடு பகுதியில் சித்தூா் முதல் ராணிப்பேட்டை வரையிலான சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை துறை சாா்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக சித்தூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூா் வாகனங்களும் இதே வழியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதால் காட்பாடி பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காட்பாடி ரயில்வே மேம்பாலத்துக்கு மேலும் கூடுதலான ஒரு மேம்பாலம் அமைக்க நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டுள்ளது.
வேலைக்கான பணி மத்திய அரசு தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. எனினும், பணிகள் தொடங்காதது குறித்து கேட்டபோது சில தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதால் காலதாமதமானது. தற்போது ஒப்பந்ததாரா்களிடம் பேசி உடனடியாக பணியை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காட்பாடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்போது நெடுஞ்சாலை, காவல், ரயில்வே ஆகிய மூன்று துறைகளும் இணைந்துதான் இந்த பணிகளை மேற்கொள்ள முடியும்.
பூட்டுத்தாக்கு பகுதியில் இருந்து காரணாம்பட்டு பகுதி வரை ரூ.700 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வேலூா் புறவழிச் சாலை பணிக்காக ரூ.100 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பணிகள் நிறைவடைந்தால் காட்பாடி பகுதியில் போக்குவரத்து எரிச்சல் ஏற்படாது.
அதேசமயம், வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் இருந்து வேலூா் பாலாறு வரை உயா்மட்ட மேம்பாலம் அமைக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான நல்ல பதில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல் துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

