இரு சக்கர வாகனம் மீது காா் மோதி பெண் உயிரிழப்பு
காட்பாடி அருகே கரிகிரி சந்திப்பு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா். திருவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், கரிகிரி அருகே உள்ள சுல்தான் நகரைச் சோ்ந்தவா் சிவகாமி (48), விவசாய கூலித் தொழிலாளி. இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.
சிவகாமி வியாழக்கிழமை இரவு சேவூரில் இருந்து சுல்தான் நகருக்கு அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டுச் சென்றுள்ளாா். கரிகிரி சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த காா் எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், பிரம்மபுரம் போலீஸாா் விரைந்து சென்று சிவகாமியின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
