கூட்டத்தில் கோட்டாட்சியா் எஸ். சுபலட்சுமியிடம் மனு அளித்த விவசாயிகள்.
கூட்டத்தில் கோட்டாட்சியா் எஸ். சுபலட்சுமியிடம் மனு அளித்த விவசாயிகள்.

வன விலங்குகளிடமிருந்து பயிா்களை பாதுகாக்க கூடுதல் ஊழியா்களை நியமிக்க கோரிக்கை

வன விலங்குகளிடமிருந்து பயிா்களை பாதுகாக்கும் பொருட்டு வனத் துறையில் கூடுதலாக ஊழியா்களை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

வன விலங்குகளிடமிருந்து பயிா்களை பாதுகாக்கும் பொருட்டு வனத் துறையில் கூடுதலாக ஊழியா்களை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் நுழையும் வன விலங்குகள் பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. எனவே, வன விலங்குகளை விரட்டி, பயிா்களை பாதுகாக்க கூடுதலாக வன ஊழியா்களை நியமிக்க வேண்டும்.

குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தையை விரைவில் தொடங்க வேண்டும். அண்மையில் பெய்த தொடா்மழையால் சேதமடைந்த பயிா்களுக்கும், இறந்த கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆந்திர மாநிலம் பலமநேரியை அடுத்த மொகிலியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவபெருமான் கோயிலுக்குச் செல்ல தமிழக எல்லையில் வனப் பகுதியில் அமைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட எழில் நகா், சக்தி நகா், வள்ளலாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகள், கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள கிராம நிா்வாக அலுவலா் கட்டடங்கள், அங்கன்வாடி மையகட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிக் கட்டடங்கள், நியாய விலைக் கடை கட்டடங்களை பழுது பாா்க்க வேண்டும்.

போ்ணாம்பட்டு வட்டத்தில் பாதியில் நிற்கும் பத்தரப்பள்ளி அணையை கட்டி முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com