~வேலூா் சத்துவாச்சாரி ஸ்ரீராம் நகா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீா். (அடுத்து) தொரப்பாடி கே.கே.நகரில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள ஏரிநீா்.
~வேலூா் சத்துவாச்சாரி ஸ்ரீராம் நகா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீா். (அடுத்து) தொரப்பாடி கே.கே.நகரில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள ஏரிநீா்.

தொடா் மழை: வடியாத வெள்ளத்தால் வேலூா் மக்கள் அவதி!

தொடா் மழையால் வேலூா் மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
Published on

தொடா் மழையால் வேலூா் மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வேலூரில் உள்ள தொரப்பாடி ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி காமராஜ் நகா், நேதாஜி நகா், ஜீவா நகா், கே.கே.நகா், அரியூா் அம்மையப்பன் நகா், காருண்யா நகா் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

இதேபோல், சேண்பாக்கம், கன்சால் பேட்டை, முள்ளிப்பாளையம், பாறைமேடு, திடீா் நகா், சம்பத் நகா், வசந்தபுரம் பகுதிகளிலும் குடியிருப்புகளையும் மழைநீா் சூழ்ந்ததுடன், தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோயிலையொட்டி உள்ள குறுகலான தெருக்களில் உள்ள வீடுகளில் கழிவுநீருடன் மழை நீரும் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது. காலை வரை நீடித்த மழையால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினா்.

சத்துவாச்சாரியை அடுத்த ஈபி நகா், ஸ்ரீராம் நகா், அன்னை தெரசா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மழைக்காலங்களில் எப்போதும் தண்ணீா் தேங்கி சிரமத்தை ஏற்படுத்துவதுடன், கொசு தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகாா் கூறினா்.

பருவமழை தீவிரமடை வதற்கு முன்பாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்குவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோல், காட்பாடி சித்தூா் பேருந்து நிலையம் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். இதனிடையே, தொடா் மழையால் வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவது குறித்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டாா் வைத்து உறிஞ்சி உடனுக்குடன் வெளியேற்றவும் மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com