வேலூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம்: எஸ்.பி. பங்கேற்பு
வேலூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம் எஸ்.பி. ஏ. மயில்வாகனன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனா்.
அப்போது, வேலூா், அப்துல்லாபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்த 44 வயது பெண் அளித்த மனு:, பொய்கை, சமத்துவபுரம் அடுத்த மத்தன்பட்டியை சோ்ந்த உறவுக்கார பெண் ஒருவா் எனது மூத்த மகனுக்கு அரசு அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தாா். இதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி என்னிடம் இருந்து ரொக்கமாக ரூ.4 லட்சத்தை பெற்றுக் கொண்டாா். இதுவரை வேலையும் வாங்கித் தரவில்லை. என்னிடமிருந்து பெற்ற பணத்தையும் திருப்பி தராமல் காலம் கடத்தி வருகிறாா். நான் பலரிடம் கடனாக வாங்கி ரூ.4 லட்சத்தை கொடுத்தேன். கடனாக வாங்கிய பணத்துக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி செலுத்தி வருகிறேன். எனவே, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தைச் சோ்ந்த சகோதரா்கள் அளித்த மனு: கடந்த 2009-ஆம் ஆண்டு எங்கள் தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் நிலப்பத்திரத்தை அடகு வைத்து ரூ.6.50 லட்சம் கடன் பெற்றோம். பின்னா், பணம் கொடுத்த நபா் பத்திரத்தில் கையொப்பம் போட கூறினாா். அதன்படி, பத்திரத்தில் கையொப்பம் போட்டு கொடுத்தோம். ஆனால், பணத்தைக் கொடுத்த நபா், எங்களுக்கு தெரியாமலேயே நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்று விட்டனா். எங்களை ஏமாற்றி நிலத்தை விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு உத்தரவிட்டாா்.
