உடுமலை, ஜன. 8: நெல் வயல்களில் வாத்து மேய்ப்பதற்கு ஏலம் விடுவதில் எழுந்த பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகக் கூட்டப்பட்ட அமைதிக் கூட்டத்தில், விவசாயிகள்- அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மடத்துக்குளம் வட்டம், கடத்தூர் கிராமத்தில் அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில் சுமார் 1,500 ஏக்கர் நெல் வயல்கள் உள்ளன. இந்த நிலங்களில் அறுவடை முடிந்ததும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாத்துகளை மேய்க்கரு ஏலம் விட்டு, இதற்காக வாத்து உரிமையாளர்களிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் குறிப்பிட்ட தொகை வசூல் செய்வதும் வழக்கம்.
இதில் கடந்த ஆண்டு பிரச்னைகள் ஏற்பட்டதால், கடத்தூர் ஊராட்சி மன்றம் சார்பில் ஏலம் விடப்பட்டது. இந்த ஆண்டும் ஏலம் விடுவதில் கடத்தூர் ஊராட்சி மன்றத்திற்கும் விவசாயிகள் சங்கத்தின் இரு பிரிவுகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.
இதனால் கடத்தூரில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சுமார் 25க்கு மேற்பட்ட வழக்குகள் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளன. மேலும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் மனுக்கள் சென்றன.
இதனால் இப்பகுதியில் அமைதிக் கூட்டத்தை நடத்துமாறு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி கோட்டாட்சியர் அலுவகத்தில் சனிக்கிழமை அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், கடத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர், விவசாயிகள் சங்கத்தின் இரு பிரிவுகள், மக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் தரப்பில் உடுமலை கோட்டாட்சியர் ம.சோமசேகரன், வட்டாட்சியர்கள் அ. லியாகத் அலி (மடத்துக்குளம்), த.சபாபதி (உடுமலை) ஆகியோரும், இதுபோக மடத்துக்குளம் காவல்துறை ஆய்வாளர் கனகராஜ், சுகாதாரத் துறை ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர் கலையரசன் பேசும்போது, தனி நபர்கள் ஏலம் விட சட்டத்தில் இடமில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் பராமரிப்புத் தொகையை செலுத்தினால் நமக்கு நாமே திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஆகியவற்றில் பாசன வாய்க்கால்களை பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் ராசு உள்ளிட்டோர் பேசும்போது வாத்துகளை எங்களது பட்டா நிலங்களில்தான் மேய்த்துக் கொள்கிறோம். இதற்கு ஊராட்சி மன்ற அனுமதியே வேண்டாம். எங்களது சங்கம் மூலமே ஏலம் விட்டுக் கொள்கிறோம் என்றனர்.
விவசாய சங்கத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் கதிரவன் உள்ளிட்டோர் பேசும்போது, சங்கம் என்ற பெயரில் பொய்க் கணக்கு காட்டி பல ஆயிரம் ரூபாயை ஏமாற்றி வருகின்றனர். ஆகையால் பொறுப்பான அரசு அதிகாரிகள் மூலமே வாத்து மேய்க்க ஏலம் விடும் பொறுப்பைக் கொடுக்க வேண்டுóம் என்றனர்.
மக்கள் கூறுகையில், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே ஏலம் விடுவது, வாய்க்கால்களை பராமரிப்பு போன்ற விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் முடிவில் மடத்துக்குளம் வட்டாட்சியர் அ.லியாகத் அலி பேசியது:
இந்தக் கூட்டத்தில் எடுத்துள்ள இறுதி முடிவின்படி பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டுதான் எதிர்காலத்தில் வாத்து மேய்க்க ஏலம் விடப்படும். அதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு வாய்க்கால்கள் பராமரிப்பு செய்யப்படும். அதுவரை யாரும் எந்த பிரச்னைகளையும் எழுப்பக் கூடாது என்றார்.
இந்த கூட்டத்திற்காக நூற்றுக் கணக்கான விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.