கோவை, ஜன. 22: கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் முதுகு தண்டுவடத்தில் அரிய அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த செல்லம்மாள் (60) கடந்த 3 ஆண்டுகளாகக் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் சிறுநீர், மலம் கழிப்பதிலும், மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்து வந்துள்ளது. மேலும் அவரது கை, கால்கள் பலவீனம் அடைந்தன. அதையடுத்து சிகிச்சைக்காக கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து பார்த்ததில் செல்லம்மாளின், முதுகுத் தண்டு பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தண்டுவட அறுவைச் சிகிச்சை நிபுணர் ஸ்ரீதரன் நம்பூதிரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் இச் சிகிச்சையை மேற்கொண்டனர். இது குறித்து டாக்டர் ஸ்ரீதரன் நம்பூதிரி கூறியது:
செல்லம்மாளின் தலை எலும்பு முதுகுத் தண்டுடன் சேருமிடத்தில் குறைபாடு இருந்தது. முதுகுத் தண்டின் ஆரம்ப எலும்புப் பகுதி, கபால எலும்புடன் இணைந்து இறுகி இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக முதுகு தண்டின் இரண்டாவது, மூன்றாவது அடுக்குகளின் மீது அழுத்தம் கூடியிருந்தது.
சாதாரணமாக ஒருவரின் முதுகுத் தண்டின் குறுக்களவு 13 மி.மீ. இருக்க வேண்டும். ஆனால் செல்லம்மாளுக்கு தண்டுவடம் மிகவும் சுருங்கி, குறுக்களவு 3 மி.மீ. தான் இருந்தது.
முதுகுத் தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சை செய்தால் ஏற்படும் சவால்களைக் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னந்தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அழுத்திக் கொண்டிருந்த எலும்பையும் திசுவையும் அகற்றி இறுக்கம் குறைக்கப்பட்டது என்றார்.