உடுமலை, ஜன. 22: தலைமை ஆசிரியர்களுக்கான பள்ளி மேம்பாட்டு பயிற்சி முகாம் உடுமலையில் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
÷கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் டி.ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்தார். திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி நிறுவன முதல்வர் பிரேம் அதிபன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். முகாமில் பள்ளியில் உள்ள வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல், படைப்பாற்றல் கல்வியை முறையாக நடைமுறைப்படுத்துதல், பள்ளிக் கல்வி இயக்கத்தின் நோக்கங்களை செயல்படுத்துதல், பள்ளிகளில் அன்றாடம் எதிர் நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற திறன் வளர்க்கும் நோக்கத்துடன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
திருப்பூர், உடுமலை, பல்லடம், பொங்கலூர், குடிமங்கலம், மடத்துக்குளம், அவிநாசி ஆகிய ஒன்றியங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள் முகாமில் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்சி பள்ளி முதுகலை விரிவுரையாளர்கள் ஜி.திருஞான சம்பந்தன், ஏ.ரீட்டா, பி.இளங்கோ ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
எஸ்கேபி மேல்நிலைப் பள்ளி செயலர் கே.ஆர்.கே. ராதாகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் பி.ரவீந்திரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.