பந்த்: நீலகிரியில் இருந்து கர்நாடகத்துக்கு போக்குவரத்து பாதிப்பு

உதகை, ஜன. 22: கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பின் காரணமாக நீலகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகத்துக்கு செல்லும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.  கர்நாடக மாநில முதல்வ
Published on
Updated on
1 min read

உதகை, ஜன. 22: கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பின் காரணமாக நீலகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகத்துக்கு செல்லும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

 கர்நாடக மாநில முதல்வர் மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதியளித்ததையடுத்து கர்நாடக மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக பெங்களூருவிலிருந்து உதகைக்கு வர வேண்டிய தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை இரவு பெங்களூருவிலிருந்து உதகைக்கு வர வேண்டியவர்கள் அங்கேயே சிக்கிக் கொண்டனர்.

 அதேபோல, உதகையிலிருந்து சனிக்கிழமை பகலில் பெங்களூருக்கு செல்ல வேண்டிய இரு மாநில அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் உதகைக்கு வந்த பேருந்துகள் திருப்பி அனுப்பப்படாமல் உதகையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலைமை சீரடைந்தால் மட்டுமே இப்பேருந்துகள் சனிக்கிழமை இரவு பெங்களூருவுக்கு அனுப்பப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இரு மாநில அரசுப் பேருந்துகளும் பெங்களூருவிலேயே நிறுத்தப்பட்டதால் உதகைக்கு வர வேண்டியவர்கள் அங்கிருந்து மைசூருக்கு வந்து, அங்கிருந்து தனியார் மேக்சி கேப் மற்றும் பிற வாகனங்கள் மூலம் சனிக்கிழமை பகலில் வந்தனர். இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த வாகனங்களும் குண்டல்பேட்டை பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.

 கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற முழு அடைப்பின் காரணமாக உதகையில் சனிக்கிழமையன்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் குறைவாகவே இருந்தது. கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் மட்டுமே உதகையில் அதிகளவில் காணப்பட்டனர்.

 இதற்கிடையே தற்போது கர்நாடக மாநிலத்திலிருந்துதான் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் நீலகிரிக்கு கொண்டு வரப்படுகின்றன.

 ஆனால், இந்தக் காய்கறி வாகனங்களும் கர்நாடக மாநிலத்திற்குள்ளேயே நிறுத்தப்பட்டதால் காய்கறி வரத்தும் முற்றிலும் நின்று போனது. இதன் காரணமாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளும் வெள்ளிக்கிழமை விற்ற விலையை விட அதிகமான விலைக்கே விற்கப்பட்டன.

 உதகையிலுள்ள உழவர் சந்தையில் இவ்விரு காய்கறிகளும் கிடைக்காததால் பொதுமக்களும் அவதியுற்றனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் காய்கறி வாகனங்கள் உதகைக்கு வந்தால்தான் காய்கறிகளும் விலை குறைத்து விற்பனை செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com