திருப்பூர், ஜன. 29: திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சாயக் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த கழிவுநீரை கடலுக்குக் கொண்டுசெல்லும் திட்டமே மிகச் சிறந்தது. அத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று, காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் விடியல் எஸ்.சேகர் தெரிவித்தார்.
÷நொய்யலில் கலக்கவிடப்படும் சாயக் கழிவுநீரால் காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ் விவசாயிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், திருப்பூரிலுள்ள அனைத்து சாய, சலவை ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களையும் மூடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
÷இதுகுறித்து காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் விடியல் எஸ்.சேகர் கூறியது:
÷திருப்பூர் சாயக் கழிவுநீர் பிரச்னையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
÷உடனடியாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை, மின்வாரியத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீரை சுத்தப்படுத்தாத சாய ஆலைகளை மூடவும், தொடர்ந்து சாயக் கழிவுநீர் நொய்யலில் கலப்பதைத் தடுக்கவும் வேண்டும்.
÷தவிர நீதிமன்ற உத்தரவுப்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
÷சாயக் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த, கடந்த 2007 ஜன. 27ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் "திருப்பூர், ஈரோடு சாயக் கழிவுநீரை ஒருங்கிணைத்து சுத்திகரித்து குழாய்கள் மூலம் கடலுக்கு கொண்டுசெல்லும் திட்டம் ரூ. 700 கோடியில் செயல்படுத்தப்படும்' என்று முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
÷அத்திட்டத்துக்கு மத்திய அரசின் பங்காக ரூ. 200 கோடி கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தவிர, இத் திட்டத்துக்கான திட்ட ஆய்வறிக்கை தயார் செய்ய மத்திய அறிவியல் தொழிய்க்நுட்ப அமைச்சகம் ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்தது.
÷இருப்பினும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் தொடர் நடவடிக்கையின்மை காரணமாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 200 கோடி பயன்படுத்தப்படாமல் கிடப்பிலுள்ளது.
÷சாயக்கழிவு நீரை கடலுக்கு கொண்டுசெல்லும் திட்டமே திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலவும் இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த முடியும் என்பதால், இத் திட்டத்துக்கான திட்டஅறிக்கையை விரைவில் தயார் செய்து மத்திய அரசுக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
÷நீதிமன்றம் ஓராண்டு காலஅவகாசம் வழங்கியும் பல சாய ஆலை உரிமையாளர்கள் கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாக நீதிமன்றம் விதித்துள்ள இந்த உத்தரவால், பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
÷ஒட்டுமொத்த பனியன் தொழில் மற்றும் லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு நிலையைக் கருத்தில்கொண்டு விரைவில் சுத்திகரிப்புப் பணிகளை முறைப்படுத்தி சாயஆலைகள் இயங்குவதற்குரிய முயற்சிகளை அதன் உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.