கோவை, ஜன. 29: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டியதற்காக பிரதமர் மன்மோகன் சிங், கப்பல் போக்குவரத் துறை அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு கோவை சைவப் பெருமக்கள் பேரவை பாராட்டுத் தெரிவித்துள்ளது.
கோவை சைவப் பெருமக்கள் பேரவையின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் உ.சங்கரநாராயணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் பெயரை சூட்டி, வ.உ.சிதம்பரனார் துறைமுக நிறுவனம் என அறிவித்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
÷ஆங்கில ஆதிக்கத்தைத் தகர்க்கும் பொருளாதாரத் தாக்குதலாக, தூத்துக்குடியிருந்து இலங்கைக்கு சுதேசிக் கப்பலை செலுத்தினார் வ.உ.சிதம்பரனார். அவர் தியாகத்தை போற்றும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயரை சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதை நாட்டிற்கு அறிவித்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இப்பேரவை பாராட்டுத் தெரிவிக்கிறது.
தென்னாட்டு திலகர் என போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாருக்கு பாராளுமன்ற
வளாகத்தில் முழு உருவச் சிலை நிறுவ வேண்டுமென என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவைச் செயலர் ஜி.காசிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.