திருப்பூர், ஜன.29: மன உலகம் வலுப்பெற கலை, இலக்கியங்கள் உதவுகின்றன என்று திருப்பூரில் நடைபெற்ற விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராஜேந்திரன் கூறினார்.
திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் 2ம் நாள் நிகழ்ச்சியாக தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய விருதுகள் 2009 விழா சனிக்கிழமை நடந்தது. அதில், கவிதை பிரிவில் வீ.கே.கஸ்தூரி நாதன், கல்லாடன், நாவல் பிரிவில் ஆர்.எஸ்.ஜேக்கப், வளவ.துரையன், சிறுகதைகளுக்கு கால பைரவன், லட்சுமண பெருமாள், கட்டுரை பிரிவில் கி.முப்பால்மணி, வெ.நீலகண்டன், மொழி பெயர்ப்புக்கு சிவ.முருகேசன், சிறுவர் இலக்கியத்துக்கு ம.இலெ.தங்கப்பா, பெ.கருணாகரன், வரலாறு பிரிவுக்கு முகில்.சிவா, இலந்தை சு.ராமசாமி, இதர பிரிவில் மா.முருகப்பன், கொ.மா.கோதண்டம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வழங்கி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராஜேந்திரன் பேசியது:
புத்தகங்கள் எதற்காக எழுதப்படுகின்றன கலை, இலக்கியம் எதைத் தருகிறது? மனை வி, குழந்தைகளுடன் வாழ வேண்டிய தருணத்தில் புத்தகங்கள் எழுதுவதில் படைப்பாளிகள் நேரத்தை செலவிடுவது எதற்கு? இப்படி கேள்விகளை யோசித்து பார்த்தால் வாழ்க்கைக்கு தேவைதான் என்ன என்று தோன்றுகிறது.
வெட்டவெளி இருந்தாலும் பாதுகாப்புடன் வாழ மனிதர்களுக்கு வீடு தேவைப்படுகிறது. பறவைகளும் அதற்காகத் தானே கூடுகள் கட்டி வாழ்கின்றன. அதைப்போல நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ கலை, இலக்கியங்கள் உதவுகின்றன.
ஆறாவது அறிவு என்பது மனம். அதை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியரே குறிப்பிட்டுள்ளார். மனம் உடையவர்களே மனிதர்களாக உள்ளனர். அதன்படி, அவரவர் மனதில் தனியாக ஓர் உலகம் உள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் மன உலகை உருவாக்கிக் கொண்டு நிஜ உலகில் வாழ்ந்து கொண்டுள்ளனர். இந்த மன உலகம் இல்லையேல் தற்கொலைகள் அதிகரித்துவிடும். அந்த மன உலகை வலுப்படுத்துவது கலை, இலக்கியங்கள்.
ராஜராஜ சோழனுக்கு வசதிகள் இருந்ததால் பெரியகோயிலைக் கட்டினார். அவ்வசதியில்லாத பூசலார் மனதுக்குள்ளேயே கோயிலைக் கட்டி வாழ்ந்து மடிந்தார். அந்த நம்பிக்கையும், துணிவையும் பெற வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் படைப்பாளிகளை பாராட்ட வேண்டும். புத்தகங்கள் படிக்கும்போது படைப்பாளிகளின் மன உலகை புரிந்து கொள்ள முடிகிறது.
அந்த மன உலகினில் தங்கள் மன உலகையும் பரிமாறி வலுப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் படைப்பாளிகள் நிகழ்காலத்தில் காட்டுகின்றனர். இவ்விரண்டும் வாழ்க்கைக்குத் தேவை என்றார்.
முன்னதாக, சாகித்ய அகாதெமி விருது பெற்ற மற்றும் கலைமாமணி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பாராட்டப்பட்டார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற செயலர் இளையபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.