பொள்ளாச்சி, ஜூலை 3: ஆற்றில் மணல் அள்ளுவோர் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொள்ளாச்சி கோட்டாட்சியர் எச்சரித்தார்.
÷இதுகுறித்து பொள்ளாச்சி கோட்டாச்சியர் அழகிரிசாமி கூறியது:
÷கடந்த ஐந்து மாதங்களாக பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள ஆற்றோர கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சோதனை நடத்தப்பட்டது.
÷ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியில் இரண்டு மாட்டு வண்டிகளும் கோட்டூர் பகுதியில் ஒரு மாட்டு வண்டியும் திருட்டு மணல் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு மாட்டு வண்டியும் அதை ஓட்டிவந்த மூவரும் ஆனைமலை மற்றும் கோட்டூர் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
÷மேலும் மாணிக்க மூலை, அன்னப்பாறை, பொன்னாலம்மன்துறை, பூவலப்பருத்தி, பொங்காளியூர் ஆகிய இடங்கள் ஆற்று மணல் அள்ளும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அங்கு அடிக்கடி ரோந்துப் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
÷ஆற்று மணல் அள்ளுவோர் மீதான அபராதத் தொகை ரூ. 4,900 லிருந்து ரூ, 5,100 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதையும் மீறி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவோர் மீது காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.