பவானி, ஜூலை 3: பவானியில் நீச்சல் தெரியாததால் காவிரியில் அடித்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கிய இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
குமாரபாளையம் நாராயணா நகரைச் சேர்ந்தவர் முத்துமணி மகன் மாதேஸ்வரன் (26). இவருக்கும் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கவிதாவுக்கும் (20) திருமணமாகி ஒராண்டே ஆகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பவானி காவேரி வீதி காசி விஸ்வநாதர் கோயில் எதிரில் காவிரி படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
நீச்சல் தெரியாத இவர் ஆழமான பகுதிக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதில், தண்ணீரில் மூழ்கிய இவர் நீரோட்டத்தின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாதேஸ்வரனை ஆற்றில் மூழ்கித் தேடும் பணியில் ஈடுபட்டனர் (படம்).
நீண்ட நேரம் தேடியும் மாதேஸ்வரனில் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், பவானி கூடுதுறை அருகே மாலையில் இவரது சடலம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள இவரது மனைவி கவிதா மற்றும் உறவினர்கள் கதறி அழுந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.