கோபி, ஜூலை 3: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் முதல்போக நெல் பயிர்களுக்கு பயனுடையதாக கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 53 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நெற்பயிருக்கு போதுமான சத்துக்கள் கிடைப்பதற்காக நடவு செய்யப்பட்ட 20 நாட்களில் ஒருமுறையும், 35 நாட்களுக்கு பிறகு ஒரு முறையும், 45 நாட்களுக்கு பிறகு ஒரு முறையும் என மொத்தம் 3 முறை உரமிடுவது அவசியம்.
தடப்பள்ளி பாசனப் பகுதிகளில் தற்போது பயிர்கள் நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்கும் மேல் ஆகிறது.
இதனால் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து கிடைக்க மேலுரமாக யூரியா மற்றும் பொட்டாஷ் ஆகிய உரங்களை இடவேண்டும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் தடப்பள்ளி பாசனப்பகுதிக்கு உள்பட்ட கூகலூர் கிளை வாய்க்கால் பகுதிகளில் தற்போது தான் நெல் சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன.
அதனால் அந்த பகுதிகளில் வயல்களுக்கு அடியுரம் இடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கோபி வேளாண்மை விரிவாக்க மையம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர் சுதந்திரநாதன் கூறுகையில், கோபி கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் யூரியா உரங்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது 1.5 டன் யூரியா மட்டுமே இருப்பு உள்ளது. டி.ஏ.பி உரங்கள் 22 டன், பொட்டாஷ் உரம் 25 டன், ஜிங்க்சல்பேட் 5 டன் என மொத்தம் 53.5 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றார்.