சொட்டுநீர் பாசனத்துக்கு 100 சத மானியம் அளித்தால் விவசாய உற்பத்தி பெருகும்

ஈரோடு, ஜூலை 3: சொட்டுநீர் பாசனத்துக்கு 100 சத மானியம் அளிக்க அரசு முன்வரும் பட்சத்தில் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.  சொட்டு நீர்ப்பாசனத்துக்கு அளிக்கப்படும் மானியத
Published on
Updated on
1 min read

ஈரோடு, ஜூலை 3: சொட்டுநீர் பாசனத்துக்கு 100 சத மானியம் அளிக்க அரசு முன்வரும் பட்சத்தில் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 சொட்டு நீர்ப்பாசனத்துக்கு அளிக்கப்படும் மானியத்தை, 100 சதமாக அதிகரிக்க முதல்வர் முடிவெடுத்துள்ளார். இதனால், விவசாயிகளுக்கு உரச்செலவு குறைவதுடன், 30 சதவீதம் தண்ணீர் சேமிக்கவும், மகசூல், 20 சதவீதம் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தது:

 திருந்திய நெல் சாகுபடி முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும், சொட்டு நீர்ப் பாசனத்துக்கு, 100 சத மானியம் அளிக்கவும் முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும், அது தொடர்பான தகவல்களை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேசிய நுண்ணீர் பாசன இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இத்திட்டத்தில் வேளாண் பயிர்களான கரும்பு, தென்னை, தோட்டக்கலைப் பயிர்களான மஞ்சள், கொய்யா, மரவள்ளி உள்பட அனைத்து பயிர்களுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் அளிக்கப்படுகிறது.

 சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசின் 50 சதம், மாநில அரசின் 25 சதம் என மொத்தம் 75 சத மானியம் வழங்கப்படுகிறது.

இதர விவசாயிகளுக்கு மத்திய அரசின்  40 சதம், மாநில அரசின் 25 சதம் என மொத்தம் 65 சத மானியம் வழங்கப்படுகிறது.

 சொட்டு நீர்ப் பாசனத்தில் செடிக்கு நேரடியாக தண்ணீர் விடப்படுகிறது. அதனால், 30 சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. உரத்தை தண்ணீரில் கரைத்து சொட்டு நீர்ப்பாசனம் மூலம் செடிகளுக்கு கிடைப்பதால், உரம் வீணாவது குறைகிறது. தண்ணீர் செடிக்கு மட்டுமே செல்வதால், மற்ற இடங்களில் களைகள் முளைப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. சாகுபடி செலவு குறைகிறது. மகசூல் 20 சதம் வரை அதிகம் கிடைக்கிறது.

 தமிழகத்தில் தற்போது உணவு உற்பத்தி, 100 லட்சம் டன்னாக இருக்கிறது. இந்தாண்டு, 115 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வரும் நிலையில், சொட்டு நீர்ப்பாசனம் முழு அளவில் செயல்படுத்தும்போது, 20 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி கூடுதலாக கிடைக்கும். மேலும், 30 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்படும். அதை வைத்து பாசன வசதி பெறும் நிலப்பரப்பை அதிகப்படுத்தவும் முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.