திருப்பூர், ஜூலை 3: தொழிற்சாலைக் கழிவுகளால் நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கவும், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தி திருப்பூரில் பிரசார பயணம் நடைபெற்றது.
÷திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பில் நன்னீர் 2011 என்ற இப்பிரசார பயணம் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பூரில் பிரசார பயணம் சனிக்கிழமை நடந்தது.
÷திருப்பூர் காங்கயம் சாலை வேலன் ஹோட்டல் பகுதியிலிருந்து துவங்கிய இப்பிரசார பயணம் வளம் பாலம், ஈஸ்வரன் கோயில் வீதி வழியாக அரிசிக்கடை வீதியை அடைந்தது. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வேண்டும். ஆலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.÷தொடர்ந்து, அரிசிக்கடை வீதியில் கோரிக்கை வலியுறுத்தி கருத்தரங்கம் நடந்தது. அதில், திருப்பூர் மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் ஏ.அலோசியஸ் தலைமை தாங்கி பேசியது:
÷கடந்த 2 நாட்களில் சுமார் 2 லட்சம் விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்களை சந்தித்து இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 17 ஆறுகள், 127 துணை ஆறுகள், 61 பெரிய நீர்தேக்கங்கள், 39000 ஏரி, குளம், குட்டைகள் உள்ளன. தமிழகத்தில் சராசரியாக மிகக் குறைந்த அளவாக ஆண்டுக்கு 979 மி.மீட்டர் மழை பெய்கிறது. நீரின் ஆய்வுப்படி தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் பல்வேறு நிலைகளில் மாசுபடுகிறது.
÷அக்கழிவுநீர் குடிநீரில் கலப்பதால் மக்களுக்கும், விவசாயத்துக்கும், நிலங்களுக்கும் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதனால், அன்றாடத் தேவைக்கான உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்கிறது. எனவே, தமிழகத்தில் நீர் வளத்தை கண்காணித்து நீர்வள மேம்பாட்டு நடவடிக்கைகளில் செம்மையாக்க நீர்வள ஆதாரத் துறையை தனி அமைச்சகமாக மாற்ற வேண்டும்.
÷பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதுமான அளவில் வழங்கிடவும், சாய ஆலைக்கழிவுநீரை சுத்திகரிக்கும் கூட்டுப் பொறுப்பை அரசு ஏற்கவும் அதற்கான செலவை ஆலை உரிமையாளர்களிடம் வசூலிக்கவும், விவசாயிகளுக்கு நீர் பாசனத்துக்கு மாசற்ற தண்ணீர் வழங்கிடவும், தொழிற்சாலைகளில் திட மற்றும் திரவக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கவும், சாயக் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப்படுகை விவசாய நிலங்களில் குறுகிய காலத்தில் வளரக்கூடிய மரங்களை நட்டு பராமரிக்கவும், நொய்யல் ஆற்றுப்படுகையொட்டிய குளம், குட்டைகளை உடனடியாக தூர்வாரவும் அரசு துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.
÷தொடர்ந்து, இக்கோரிக்கைகளை விளக்கி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப் பட்டன. கேர் டி அமைப்பின் இயக்குநர் பிரிதிவிராஜ், தொன்போஸ்கோ மைய இயக்குநர் பாக்கியராஜ், கரூர் சைக்கோ அறக்கட்டளை தலைவர் கிறிஸ்துராஜ், திண்டுக்கல் செரின் அமைப்பின் செயலர் ச.ஜேம்ஸ்விக்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.