ஈரோடு, ஜூலை 3: அஞ்சல் அலுவலகங்களை மூடும் முயற்சியை கைவிடக் கோரி அஞ்சல் ஊழியர்கள் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அஞ்சல் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் கோட்டத் தலைவர் ராக்கியண்ணன் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்ட செயலர்கள் உன்னிகிருஷ்ணன், சுந்தர வடிவேல், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனியார் நிறுவன ஆலோசனையை பெற்று 9,797 தபால் அலுவலகங்களை மூடும் நடவடிக்கையை எதிர்த்தும், தபால் ஊழியர்களின் 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அஞ்சல், ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், வரும் 5ம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.