கோவை, ஜூலை 9: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது அன்றும் இன்றும் என்றும் மாறாத கோட்பாடு. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்துவிட்டால், மக்கள் நல்வாழ்வு பெறுவர் என்று, தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.
÷கோவை மணி மேல்நிலைப்பள்ளி, நானி கலையரங்கில் இளங்கோ அடிகள் இலக்கிய மன்றம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற 28-ம் ஆண்டு சிலப்பதிகார விழாவில் சிறப்புரை ஆற்றிய அவர் பேசியது:
÷இளங்கோ அடிகளுக்கு பல்கலைக்கழகங்களில் இருக்கை வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்கும் எனக்கு ஆச்சரியமும் திகைப்பும் ஏற்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கும் இயக்கத்தினர், கண்ணகியின் பெயரையும், இளங்கோ அடிகளின் பெயரையும், சிலம்பின் பெயரையும் மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தாலும், இளங்கோவின் பெயரால் பல்கலைக்கழகங்களில் ஓர் இருக்கையைக் கூட
உருவாக்க முடியவில்லை என்பதைப் பார்க்கும்போது திகைப்பாக உள்ளது. உதட்டளவு மரியாதைதானா இவர்களுக்கு கண்ணகியிடமும் சிலப்பதிகாரத்துடனும்? இளங்கோ அடிகளுக்கு இருக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இனிமேல் தினமணி தன்னை முழு மூச்சாக இணைத்துக் கொள்ளும்.
÷"வடவரையை மத்தாக்கி...' என்ற பாடல் பிரபந்தங்களில் ஒன்றாக இருக்க வேண்டும், ஆழ்வார்கள் பாடியிருக்க வேண்டும் என தமிழ் படித்தவர்கூடத் தவறாகக் கருதுகிறார்கள். ஆழ்வார்களுக்கும் பிரபந்தங்களுக்கும் முன்னோடியாக இயற்றப்பட்ட இந்தப் பாடல் சிலப்பதிகாரத்தில்தான் இருக்கிறது.
÷பண்டைய புலவர்களுக்கு எந்தளவுக்கு சமய நல்லிணக்கம் இருந்தது என்பதைச் சிலம்பும் ராம காதையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒரு சமணத் துறவியான இளங்கோ அடிகள் படைத்திருக்கும் காவியத்தில், வைணவத்தைப் பிழிந்தெடுத்து அதன் சாரத்தைக் கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
÷வைணவ காவியமான ராம காதையை எழுதிய கம்பன், சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி இருப்பார். சமய நல்லிணக்கம் நம்மால் பேசப்படுகிறது, ஆனால் பின்பற்றப்படவில்லை. அன்று பேசப்பட்டதோடு, பின்பற்றவும்பட்டது என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
÷அதேபோல, பெண்ணுரிமை பற்றிப் பேசுகிறோம், அதை நடைமுறைப்படுத்துகிறோமா எனத் தெரியவில்லை. ஒரு குற்றவாளியின் மனைவி அரசனின் முன்பு நின்று, கேள்வி எழுப்புகிறாள். அத்தகைய உரிமை இன்று குடியரசான இந்தியாவிலோ, ஜனநாயகத்தைப் பின்பற்றும் உலக நாடுகளிலோ இருக்கிறதா என்று பார்த்தால் சிலம்பு காட்டும் நெறி புரியும்.
÷குற்றவாளி என்று கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கோவலனின் மனைவி கண்ணகி, பாண்டிய மன்னனின் சபையில் போய் நியாயம் கேட்க முடிந்த அளவுக்கு, அரசனுடன் வாதம் செய்யும் அளவுக்கு, சிலப்பதிகார காலத்தில் பெண்ணுரிமை இருந்திருக்கிறது. இன்றைய நிலையுடன் அதை ஒப்பிட்டுப் பாருங்கள்.
÷"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று அன்று சிலம்பு சொன்னது. அது இன்றும் பொருந்துகிறது. இது அன்றும், இன்றும், என்றும் மாறாத கோட்பாடு. இதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டாலே போதும். நாடு செழிக்கும், மக்கள் வளமை பெறுவார்கள், தர்மம் சிறக்கும்.
சிலம்பு, ராம காதை இரண்டின் அடிப்படை நோக்கமும் தர்மம் வெல்ல வேண்டும் என்பதுதான். தர்மத்தை நிலைநாட்டுவது என்ற அடிப்படைக் கோட்பாட்டின்படி எழுதப்பட்ட காவியங்கள் தான் சிலப்பதிகாரமும், கம்பனின் ராம காதை மற்றும் ஏனைய காவியங்களும்.
÷அதிலும் சிலப்பதிகாரம் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் ஊழ்வினை என்பதை வலியுறுத்துகிறது. விதிக்கோட்பாட்டை வலியுறுத்தும் சிலப்பதிகாரத்துக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து, தமிழ்த்தாத்தா உ.வே.சா-வின் பெயரில் விருது வழங்கும் இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் பணிகளுக்கு தினமணி தோள் கொடுக்கும் என்றார் அவர்.