வால்பாறை, ஜூலை 9: வால்பாறையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ மாணவிகள் நல விடுதிகளில் ஏதேனும் குறைகள் இருப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி கோட்டாட்சியர் அழகிரிசாமி கூறினார்.
÷வால்பாறையை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் வருகிற 13ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ள இருப்பதால் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வால்பாறை வந்த பொள்ளாச்சி கோட்டாட்சியர் அழகிரிசாமி வால்பாறையில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதி மற்றும் கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
÷விடுதிகளில் உள்ள கழிப்பிடம், சமையல் அறை, தங்கும் அறைகளைப் பார்வையிட்டு மாணவிகளிடம் அங்கு வழங்கப்படும் உணவு பற்றி கேட்டறிந்தார். விடுதிகளில் ஏதேனும் குறைகள் இருப்பது தெரியவந்தால் விடுதி காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
÷வட்டாட்சியர் சின்னப்பையன், வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.