உதகை, ஜூலை 9: ஐ பவுண்டேசன் அமைப்பு சார்பில், புதிய கண் மருத்துவமனை உதகையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) திறக்கப்படுகிறது.
ஐ பவுண்டேசன் நிறுவனர் டாக்டர் டி.ராமமூர்த்தி கூறியது:
ஐ பவுண்டேசன் அமைப்பு 1984-ம் ஆண்டிலிருந்து கண் பாதுகாப்பு மற்றும் சிகிச்சையில் அதிநவீனக் கருவிகளுடன் திறமையான மருத்துவர்களால் சிறந்த சேவையாற்றி வருகிறது. 1985-லேயே கோவையில் ரெட்டினா தொடர்பான சிகிச்சைக்கு முதன் முதலாக லேசர் சிகிச்சையை ஆரம்பித்தது. தொடர்ந்து 1997-ல் லேசிக் தொழில்நுட்பத்தில் நவீனக் கருவிகளைக் கொண்டு செயலாற்றி வந்த நிலையில், இப்போது அதிவேக எக்ûஸமர் லேசரைக் கொண்டு சிறந்த முறையில் கண் சிகிச்சை அளித்து வருகிறது.
மருத்துவமனை தொடங்கியதிலிருந்தே மக்களுக்கு இலவச சேவை செய்து வருகிறது. வருவாய் குறைவான மக்களின் நலனுக்காக கோவை மற்றும் திருப்பூரில் இரண்டு, இலவச கண் மருத்துவமனைகள் நிறுவப்பட்டு பொதுச் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இம் மருத்துவமனை நடத்தும் சுதர்சனம் திட்டத்தின் மூலம் இலவச அறுவைச் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போது, நீலகிரி மாவட்ட மக்களுக்கும் சிறந்த கண் சிகிச்சை கிடைக்க வேண்டுமென்ற நோக்கில், உதகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) புதிய மருத்துவமனை திறக்கப்படுகிறது. கேட்ராக்ட் அறுவைச் சிகிச்சை, கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்சுகளைத் தவிர்க்க லேசிக் மற்றும் சயாப்டிக் லேசர் சிகிச்சை, குளுகோமா பரிசோதனை, ரெட்டினா சிகிச்சை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான சிகிச்சை, கருவிழி சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகளுடன் இப்புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இம் மருத்துவமனையை இன்று பிற்பகல் உதகையில் உள்ள சலிவன் கோர்ட் ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில், பெங்களூரு இன்போசிஸ் நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.டி.ஷிபுலால் துவக்கி வைக்கிறார்.
சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், இந்திய அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், குட்ஷெப்பர்டு சர்வதேசப் பள்ளி முதல்வர் டாக்டர் பி.சி.தாமஸ் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த மருத்துவமனையில் அடுத்த 10 நாட்களுக்கு, கண் சிகிச்சை தொடர்பான இலவச ஆலோசனைகள் வழங்கப்படும் என, டாக்டர் ராமமூர்த்தி தெரிவித்தார். மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கிருஷ்ணகுமார் உடனிருந்தார்.