கோத்தகிரி, ஜூலை 9: கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரியிலிருந்து கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூருக்கு வேலைக்காகவும், படிப்புக்காகவும், வியாபார விஷயமாகவும் 1000க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் சென்று வருகின்றனர். கோத்தகிரியிலிருந்து இயக்கப்படும் சில பஸ்களை நம்பியே இவர்கள் உள்ளனர்.
அதிலும், சமவெளிப் பிரதேசங்களில் பல வருடங்களாக இயக்கப்பட்டு பழுதான பேருந்துகளே கோத்தகிரியிலிருந்து இயக்கப்படுகிறது.
மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரிக்கு குறுகிய நேரத்தில் வரவேண்டிய பேருந்துகள், 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வருவதால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
உதகை மற்றும் குன்னூர் பகுதியிலிருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வாடகை வாகனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒரு நபருக்கு 100 ரூபாய் முதல் 150 வரை கட்டணம் வசூலித்தாலும் வேறு வழியின்றி இதிலும் பயணிகள் செல்கின்றனர்.
இதுகுறித்து தன்னார்வ அமைப்புகளும், பொதுமக்களும் பலமுறை மனுக் கொடுத்தும் பலன் இல்லை. மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப் பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க, அமைச்சர் புத்தி சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.