சத்தியமங்கலம், ஜூலை 9: சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி செல்லும் வனச் சாலையை யானைகள் கடந்து செல்லவதால் பயணிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் வனக் கோட்டம், பண்ணாரி, ஆசனூர், திம்பம், தலமலை வனப் பகுதிகளில் அதிக அளவில் யானைகள் உலவுகின்றன.
சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் வாகனங்கள், பண்ணாரி, திம்பம், ஆசனூர் நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
பண்ணாரி முதல் புளிஞ்சூர் வரை வன விலங்குகள் அதிக அளவில் நடமாடுவதால் பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறை சார்பில் சாலையோரங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது, யானைகள், காட்டெருமைகள் ஆகியவை குடிநீர் மற்றும் இரை தேடி பண்ணாரி, புதுகுய்யனூர் வனக் குட்டை, ஆசனூர் வனப் பகுதிகளுக்குச் செல்கின்றன.
பண்ணாரி சாலையைக் கடக்கும் யானை, காட்டெருமைகளை பயணிகள் தொந்தரவு செய்வதால், அவை மக்களைத் துரத்துகின்றன. இதனால் சிதறியோடும் பயணிகள், சில சமயங்களில் காயமடைகின்றனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ந.சதீஸ் சனிக்கிழமை கூறியது:
சத்தியமங்கலம் வனக் கோட்டம் வன விலங்குகளின் சரணாலயமாக விளங்குகிறது. இங்கு, யானைகள் சாலையைக் கடப்பது இயல்பான ஒன்றாகும்.
கடந்த சில நாள்களாக யானைகளைப் பார்க்கும் பயணிகள் கூச்சலிடுவதால், அவை மிரண்டு ஓடுகின்றன. இதனால், பயணிகள் ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
யானை மிகவும் அறிவுள்ள விலங்கு மட்டுமின்றி, எவரையும் தொந்தரவு செய்யாத விலங்கு. அதன் அமைதிக்கு இடையூறாக செய்பவரைத் தாக்கக் கூடும். வன விலங்குகளை தொந்தரவு செய்யும் பயணிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.