தொடர்ந்து கோவையை புறக்கணிக்கும் ரயில்வே துறை

கோவை, ஜூலை 9: கோவை ரயில் நிலையத்தை ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்துவருவதால், தெலங்கானா மற்றும் குஜ்ஜார் இன மக்கள் போராட்டம் போல கோவையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று, ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மா
Published on
Updated on
2 min read

கோவை, ஜூலை 9: கோவை ரயில் நிலையத்தை ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்துவருவதால், தெலங்கானா மற்றும் குஜ்ஜார் இன மக்கள் போராட்டம் போல கோவையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று, ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாநகர மக்கள் ஆவேசமாக பேசினர்.

÷ரயில்வே துறையால் கோவை மாநகரம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்தும், கோவை வாலாங்குளம் மருத்துவக்கழிவுகள், குப்பைகளால் அசுத்தமாகி விட்டதற்கும் தீர்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபையில் சனிக்கிழமை நடைபெற்றது.  

  இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறுதுளி சுற்றுச்சூழல் அமைப்பு நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் தா.மலரவன், சேலஞ்சர் துரை, ஆறுக்குட்டி, தொழில் வர்த்தக சபை செயலர் தனபால் உள்ளிட்ட நிர்வாகிகளும், அரசு சாரா அமைப்புகள், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று இப்பிரச்னை குறித்து விவாதித்தனர்.

÷ராக் அமைப்பு சார்பில், கோவை ரயில் நிலையத்தில் நிலவும் அவலங்கள் குறித்தும்,

அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்ட குறைபாடுகள் விடியோ ஒளிபரப்பாக காண்பிக்கப்பட்டது. இதில் பங்கேற்றோர் பேசியது:

வனிதா மோகன்: வாலாங்குளம் மருத்துவக்கழிவுகளாலும் குப்பைகளாலும் நாளுக்குநாளாக விஷம் கலந்ததாக மாறிவருகிறது. வாலாங்குளத்தை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். மாநகரில் நிறைய பசுமையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் ஊரும் நாமும் சுபிட்சமாக இருக்கலாம்.

கு.ராமகிருஷ்ணன்: போராடுவதன் மூலமாகவே இக்கோரிக்கைகளை நிறைவேற்ற

முடியும். கேரள எம்பி-க்கள் ஒன்றிணைந்து அம்மாநிலத்துக்குத் தேவையான ரயில் வசதிகளை செய்துகொண்டிருக்கின்றனர். தமிழக எம்பி-க்கள் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை.

÷சேலத்திலிருந்து பாலக்காடு வரை 200 கி.மீ. தூரம் விரைவுரயிலாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கேரளாவுக்குள் சென்றதும் 7 கி.மீ., 5 கி.மீ., தூரத்துக்கு ஒருமுறை நின்று பாசஞ்சர் ரயில்போலச் செல்கின்றன. ஆனால், முக்கியமான கோவை சந்திப்பு வழியாக ரயில்கள் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை மறுக்கிறது.

பி.ஆர்.நடராஜன் (எம்பி): ரயில்வே வாரியத் தலைவர், அமைச்சர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து பலமுறை கோவை ரயில் நிலையத் தேவைகள் குறித்து முறையிட்டும் பலன் இல்லை. பல கோணங்களில் இப்பிரச்னை குறித்து இக்கூட்டத்தில் சொல்லி இருக்கின்றனர். தமிழக எம்பி-க்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவை மாவட்டத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ரயில்வே துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண முயற்சி எடுக்கிறோம்.

ராக் அமைப்பினர்: கோவை ரயில் நிலைய சந்திப்பு என்பது கோவை, நீலகிரி மாவட்ட மக்கள் பயன்படுத்தும் நிலையமாக கருத்தில் கொள்ளவேண்டும். கோவை ரயில் நிலையம் மூலமாக ஆண்டுக்கு ரூ. 100 கோடி வருவாய் ரயில்வே துறைக்கு கிடைக்கிறது. தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. போத்தனூர் வழியாகச் செல்லும் 14 விரைவு ரயில்களை கோவை சந்திப்பு வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும். இக்கோரிக்கையை ரயில்வே துறை நீண்டகாலமாகப் புறக்கணித்து வருகிறது.

மக்கள் ஆவேசம்: கோவையைப் புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவை மாவட்டத்தில் ஒருநாள் முழு "பந்த்' நடத்த வேண்டும். அஞ்சல் அட்டைகள், தந்தி மூலமாக பிரதமருக்கும் ரயில்வே நிர்வாகத்துக்கும் இக்கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும்.

÷ஆந்திராவில் தனி தெலங்கானா கோரி போராட்டம் நடப்பது போலவும், ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் போராடுவது போலவும் கோவை மக்கள் இருகூர் ரயில் நிலையத்தில் கேரளா செல்லும் ரயில்கள் முன்பாக போராட்டம் நடத்த வேண்டும் என்று, கூட்டத்தில் ஆவேசமாக மக்கள் பேசினர்.

  இறுதியில், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மூலமாக இப் பிரச்னையை தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்குக் கொண்டுசென்று உரிய தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.