கோவை, ஜூலை 9: சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்தின் தலைவர் ஜி.கோபாலன் வலியுறுத்தினார்.
கோவை இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்தின் சார்பில் 28-ம் ஆண்டு சிலப்பதிகார விழா, கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மன்றத்தின் தலைவர் ஜி.கோபாலன் தலைமையுரையாற்றி பேசியது: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் சீர்காழி கோவிந்தராஜனின் இசை நிகழ்ச்சியிலும், கர்நாடக இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா.சபையிலும்
பாடியது சிலப்பதிகார பாடல் தான். பெண்களுக்கான உரிமை மறுக்கப்பட்டிருந்த அன்றைய காலகட்டத்தில், பெண்ணை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட ஈடு இணையற்ற ஒரு காவியம் இருக்கிறது என்றால் அது சிலப்பதிகாரம் மட்டும் தான். உலகிலேயே வேறு எந்த காவியத்துக்கும் இப்படி ஒரு பெருமை கிடையாது.
திருவள்ளுவர், கம்பன், பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட பலருக்கும் பல்கலைக்கழகத்தில் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழுக்கே உரிய தமிழ்க் காவியமான சிலப்பதிகாரத்தை எழுதிய அதன் ஆசிரியர் இளங்கோ அடிகளுக்கு, எந்தப் பல்கலைக்கழகத்திலும் இருக்கை இல்லாதது வருத்தமளிக்கிறது.
எனவே இளங்கோ அடிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தக் கோரிக்கை, தினமணி பத்திரிகை மூலமாக விரைவிலேயே செயல்படுத்தல் வேண்டும் என்றார்.
பெஸ்ட் ராமசாமி பேசுகையில், "மகாபாரதம், ராமாயணம் என இரு பெரும் காவியங்கள் இருப்பதைப் போல, தமிழுக்கே உரிய ஒரு காவியம் சிலப்பதிகாரமாகும். இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்திற்கு, தொடர்ந்து உதவி செய்வேன்' என்றார்.
கே.பி.டி.சிகாமணி பேசுகையில், "மனிதன் பொருளைத் தேடி அலைகிறான். பணம், பொருளாதாரம் தேவை தான். மனிதன் முழுமை பெற்றவனாக மாற கலை, இலக்கியத்தோடு பின்னிப் பிணைய வேண்டும்' என்றார்.
முன்னதாக, திருப்பூர் பெஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி மலரை வெளியிட, கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.டி.சிகாமணி பெற்றுக் கொண்டார். இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவர் கே.ராமலிங்கம் வரவேற்றார். இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்தின் செயலாளர் நா.நஞ்சுண்டன் நன்றியுரையாற்றினார்.