திருப்பூர், ஜூலை 9: மக்கள் அன்றாடம் சந்திக்கும் பொதுக் கழிப்பிடம், தெரு விளக்குகள், சாக்கடை உள்ளிட்டவற்றில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க அரசு அலுவலர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு தெரிவித்தார்.
÷பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் தலைமையில் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. ஊரகத் தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு பேசியது:
÷திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் குடிநீர் பெறுவதற்கு அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பசுமை வீடுகள் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் தேவையான இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்து வைக்க வேண்டும். தவிர, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலை முறையாக ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு திட்டப்பலன் முழுமையாக கிடைத்திடச் செய்ய வேண்டும்.
÷மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் பற்றாக் குறை நிலவுகிறது. இதனால், அரசு உதவிகள், சலுகைகள் முழுமையாக மக்களைச் சென்றுசேர சிக்கல் நிலவுகிறது. ஆனால், சிரமங்களைக் கருத்தில் கொள்ளாமல் அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு உதவியாகச் செயல்பட வேண்டும்.
÷ஒவ்வொரு துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடித் தீர்வு ஏற்படுத்தவும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் சாக்கடை, தெருவிளக்கு, சாலை, பொதுக் கழிப்பிட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும்.
அரசு அலுவலர்கள் களத்தில் இறங்கி அடிப்படைத் தேவைகளை மனசாட்சியுடன் செய்துதர வேண்டும். இதைச் செய்தாலே அரசு இயந்திரம் சரிவர இயங்குகிறது என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றார்.
÷வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் (யூஒய்இஜிபி) கீழ் 17 நபர்கள் சொந்தமாக தொழில் துவங்க ரூ.5.65 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.37.67 லட்சம் கடனுக்கான காசோலையை வழங்கினார். எம்பி கணேசமூர்த்தி (ஈரோடு), சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொள்ளாச்சி வ.ஜெயராமன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.பி.பரமசிவம், பொன்னுச்சாமி, தோப்பு வெங்கடாசலம், என்.எஸ்.என்.நடராஜன், ஏ.ஏ.கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.