சத்தியமங்கலம், ஜூலை 9: பு.புளியம்பட்டி அருகேயுள்ள கேத்தம்பாளையம் மயானத்தை மீட்க போராட்டம் நடத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்துள்ளது.
இந்த அமைப்பின் சத்தியமங்கலம் வட்ட மாநாடு, மாவட்ட அமைப்பாளர் பி.பி.பழனிச்சாமி தலைமையில் சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ. வட்டச் செயலர் க.இரா.திருத்தணிகாசலம் முன்னிலை வகித்தார்.
ஆதிதமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் ரவிக்குமார் பேசுகையில், தற்போதும் கூட சில கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை உள்ளது. இதை முற்றிலுமாக ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சத்தியமங்கலம் தோப்பூர் காலனி, பு.புளியம்பட்டி நேரு நகர் பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
பு.புளியம்பட்டி காந்திந கரில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு போராடிய தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பு.புளியம்பட்டி அருகேயுள்ள கேத்தம்பாளையம் மயானத்தை மீட்க வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலர் கே.சாமுவேல்ராஜ், சாக்கியர் பெண்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் பட்டம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைப்பின் புதிய தலைவராக பி.ஜெகநாதன், செயலராக கே.எம்.விஜயகுமார், பொருளாளராக கே.ரங்கசாமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.