கோவை, ஜூலை 9: ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முனைவர் பிரேமா நந்தகுமாருக்கு, "டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் விருது' சனிக்கிழமை வழங்கப்பட்டது.
÷கோவை இளங்கோ அடிகள் இலக்கிய மன்றம் சார்பில் 28-ம் ஆண்டு சிலப்பதிகார விழா, கோவை, பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் உள்ள நானி கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
÷இந்த விழாவில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முனைவர் பிரமோ நந்தகுமாருக்கு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவிய "டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் விருது' வழங்கப்பட்டது. இந்த விருதை இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத் தலைவர் ஜி.கோபாலன் உள்ளிட்டோர் வழங்கினர்.
இளங்கோ அடிகள் அறநிலைத் தலைவர் சி.சௌந்திரராஜ், பொற்கிழியை அவருக்கு வழங்கினார்.
÷விருதைப் பெற்றுக் கொண்டு பிரேமா நந்தகுமார் பேசியது:
÷வெளி மாநிலங்களில் வசித்து வந்ததால், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் "என் சரித்திரம்' நூலின் மூலம் தான் தமிழைக் கற்றுக் கொண்டேன்.
ஆங்கில இலக்கியம் படித்த நான் ஆரம்பத்தில் ஷேக்ஸ்பியர், கீட்ஸ், பைரன், ஷெல்லிக்கு இணையான தமிழ்க் கவிஞர்கள் கிடையாது என்கிற தவறான கருத்தைக் கொண்டிருந்தேன்.÷உ.வே. சாமிநாத அய்யரின் என் சரித்திரமும், சீவக சிந்தாமணியும், சங்க இலக்கியங்களும் தான் அந்த தவறான கண்ணோட்டத்தை மாற்றி, தமிழின் அருமையை எனக்கு உணர்த்தின.
÷நான் நிறைய நூல்களை தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்.
இதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) நிதிக்கு ஏங்கியது கிடையாது. உலகம் தமிழ் இலக்கியங்களின் வளமையையும் செழுமையையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற முனைப்புதான் அதற்குக் காரணம் என்றார் அவர்.