ஈரோடு, ஜூலை 14: மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா ஈரோட்டில் வரும் சனிக்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளில் 100 சத மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் கடந்த 10 ஆண்டுகளாகப் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
2010-11-ம் கல்வியாண்டில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 100 சத
மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், 100 சத
தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் சம்பத் நகர் கொங்கு கலையரங்கில் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வை.குமார் தலைமை வகிக்கிறார். மக்கள் சிந்தனைப் பேரவைச் செயலர் க.நா.பாலன் வரவேற்கிறார். தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் விழா குறித்து அறிமுக உரையாற்றுகிறார்.
ஆட்சியர் ஆர்.ஆனந்தகுமார், ஆசிரியர்களுக்குப் பாராட்டு மடல் வழங்கிப் பேசுகிறார்.
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறார்.
கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பேரவை பொருளாளர் என்.பழனிசாமி நன்றி கூறுகிறார்.
2010-11-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் 100 சத மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, தூக்கநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சத மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்த 21 அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு மடல் வழங்கப்படுகிறது.
இது குறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறியது:
அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும், கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுமே பயில்கின்றனர். பெற்றோர் தனிக் கவனமெடுத்துச் சொல்லிக் கொடுக்கும் சூழலோ, பணம் கொடுத்து
தனிப் பயிற்சி பெறும் வாய்ப்போ இல்லாத மாணவர்கள்தான் அதிகம் பயில்கின்றனர்.
பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, இடப்பற்றாக்குறை, படிக்காத பெற்றோரின் குழந்தைகள் போன்ற தடைகளையெல்லாம் கடந்து, அதிக அளவு மாணவர்களை
தேர்ச்சி பெற வைக்கும் ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது.
சில தனியார் பள்ளிகளில் 100 சத தேர்ச்சியை மனதில் கொண்டு கீழ் வகுப்புகளில் வடிகட்டும் முறை பின்பற்றப்படுவது வருந்தத்தக்கது. மாணவர்களைத் தரம் பிரிக்காமல், தாழ்வு மனப்பான்மை ஏற்படாத வகையில், அவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவது மிகவும் அவசியம்.
குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களிடம் தனிக் கவனம் செலுத்தி, அவர்களை அதிக மதிப்பெண் பெறச் செய்வது ஆசிரியர்களின் கடமை.
மாணவர்களுக்கு கல்வியுடன், வாழ்வின் மதிப்புகள், நாட்டுப்பற்று, சமூக உணர்வு, சேவை மனப்பான்மை, மனித நேயம், வாழ்வியல் நெறிகள் போன்ற நற்பண்புகளைக் கற்றுத்தர வேண்டும்.
நாட்டின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களைப் பாராட்டுவதில் மக்கள் சிந்தனைப் பேரவை பெருமிதம் கொள்கிறது என்றார் த.ஸ்டாலின் குணசேகரன்.