கோவை, ஜூலை 14: தேசிய பஞ்சாலைக் கழக (என்டிசி) ஆலைகளில் ஒரு ஷிப்ட் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவை- காட்டூரில் உள்ள என்டிசி தலைமை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
÷விலை வீழ்ச்சியால் நூல் தேக்கமடைவதை அடுத்து, என்டிசி-யின் கீழ் உள்ள பஞ்சாலைகளில் ஒரு ஷிப்ட் குறைப்பது என்று நிர்வாகம் முடிவு செய்து நடைமுறைப்படுத்தியது. இதற்கு தொழிலாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
÷தொழிற்சங்கத்தினருடன் நடத்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 4 வார காலத்துக்குள் தொழிற்சங்கத்தினருடன் பேசி சுமுக முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
÷இருப்பினும் அதற்கான எந்தவித நடவடிக்கையையும் என்டிசி நிர்வாகம் எடுக்கவில்லையென்று கூறி, பஞ்சாலைத் தொழிலாளர்கள், என்டிசி தலைமை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தினர்.
÷என்டிசி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சி.பத்மநாபன் (சிஐடியு), பாலசுந்தரம் (ஐஎன்டியுசி), நாகேந்திரன் (எல்பிஎப்), ராமசாமி (என்டிஎல்எப்) நிர்வாகத் தரப்பில் என்டிசி செயல் இயக்குநர் சொக்கலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
÷இரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளது. ஜூலை 18 வரை 3 ஷிப்ட்களுக்கு ஆலைகளை இயக்குவது எனவும், ஜூலை 19 முதல் ஆக. 18 வரை 2 ஷிப்ட் ஆகக் குறைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
÷இதன்படி, காலை 7 முதல் பிற்பகல் 3.30 வரையிலான பகல் ஷிப்ட், இரவு 12 முதல் காலை 7 வரையிலான இரவு ஷிப்ட் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். பிற்பகல் 3.30 முதல் இரவு 7 மணி வரையிலான ஷிப்ட் இனி இருக்காது.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
÷ஆக. 18-க்குப் பிறகு ஆலைகளில் இருக்கும் நூல் இருப்பைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.