சத்தியமங்கலம், ஜூலை 14: பு.புளியம்பட்டியில் நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை குண்டு வெடிப்பையடுத்து, பு.புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் மற்றும் போலீஸôர் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, டாணா புதூர் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்த அண்ணா நகர் அருண்குமார் (23), கருப்புசாமி (26) ஆகியோரைப் போலீஸôர் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு துப்பாக்கி கொடுத்ததாக பவானிசாகர் வேலுசாமி (40) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் கூறுகையில், நரிக்குறவரிடம் ஒருவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை வாங்கிய வேலுசாமி, அதை அருண்குமார், கருப்புசாமிக்கு விற்பனை செய்துள்ளார். அவர்கள் அதை முயல் வேட்டைக்காகப் பயன்படுத்தியுள்ளனர் என்றார்.