பல்லடம், ஜூலை 14: பல்லடத்திலிருந்து நடுவேலம்பாளையத்துக்கு புதன்கிழமை இரவு தனியார் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணம் செய்த நடுவேலம்பாளையத்தைச் சேர்ந்த ரங்கன் உள்ளிட்ட 5 பேர், குடிபோதையில் ரகளை செய்தார்களாம்.
நடத்துனர் கேசவன், ஒட்டுநர் அருண் ஆகியோர் இவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் பஸ்சை விட்டு இறங்கிய ரங்கன் உள்ளிட்டோர், பஸ் ஜன்னல் கண்ணாடியை கல்வீசி உடைத்துள்ளனர்.
இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, 10 மினி பஸ்களையும் வியாழக்கிழமை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பல்லடம் போலீசார் பேச்சு நடத்திய பின்னர் மினி பஸ்கள் இயக்கப்பட்டன.