காங்கயம், ஜூலை 14: காங்கயம் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் பழப் பயிர்கள் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ், நடப்பு நிதியாண்டிற்கு ரூ.11.50 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கயம் தோட்டக் கலை இயக்குநர் மு.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருப்பது:
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ், புதிய மாந்தோப்புகள் அமைக்கும் விவசாயிகளுக்கு முதலாம் ஆண்டிற்கு ஹெக்டேருக்கு ரூ.9,900 வீதமும், இரண்டாம் ஆண்டு பராமரிப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ.3,300 வீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
உயர் அடர் நடவு மூலம் புதிய மாந்தோப்புகள் அமைக்கும் விவசாயிகளுக்கு முதலாம் ஆண்டிற்கு ஹெக்டேருக்கு ரூ.24 ஆயிரம் வீதமும், இரண்டாம் ஆண்டு பராமரிப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ.8 ஆயிரம் வீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
தென்னையில் கோகோ ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், புதிதாக கோகோ சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் வீதமும், கோகோ சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இரண்டாம் ஆண்டு பராமரிப்புக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் வீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், நெல்லித்தோட்டம் இரண்டாம் ஆண்டு பராமரிப்புக்காக ஹெக்டேருக்கு ரூ.3,500 வீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மஞ்சள் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க, மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரத்து 500 வீதமும், வாழை சாகுபடிப் பரப்பை அதிகரிக்க வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.16 ஆயிரத்து 880 வீதமும், திசுவாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.31 ஆயிரத்து 200 வீதமும் மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தொகை இடுபொருட்களாகவும், இடுபொருட்கள் போக மீதமுள்ள தொகை காசோலையாகவும் வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தில் சேர, காங்கயம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் தங்களது பெயர்களைப் பதிவு செய்து பயன்பெறலாம்.