மஞ்சூர், ஜூலை 14: விவசாயப் பொருள்களை மானிய விலையில் வழங்க தோட்டக் கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
÷இது குறித்து தமிழக முதல்வருக்கு அதன் தலைவர் கே.எம்.ஆரி அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
÷நீலகிரி மாவட்ட கிராமப்புறங்களில் அதிகளவு விவசாயிகள் மலைகாய்கறி விவ சாயம் செய்து வருகின்றனர். விவசாயிகளுக்குத் தேவையான விதை, விவசாய கரு விகள் 50 சதவீத மானியத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயக் கருவிகளுக்கான மானியம் 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும், விவசாயத்திற்குத் தேவையான உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு மானியம் இல்லாததால் அவற்றை வெளிச்சந்தையில் வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் உள்ளிட்ட மலைகாய்கறி பயிர்களுக்கு அடிக்கடி பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதாலும், உரமிடுவதாலும் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் பயிர்கள் மகசூலைத் தரும் சமயத்தில் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தற்போது ஆடிப் பட்ட விவசாயத்திற்குத் தேவையான விதை, உரம் ஆகியவற்றை வாங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தோட்டக்கலைத் துறை மூலம் மானிய விலையில் விதைகள் வழங்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி உடனடியாக விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாய இடுபொருள்கள், கருவிகளை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்.