ஈரோடு, ஜூலை 23: குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
÷ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதில் ஆட்சியர் பேசியது: சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், உள்ளூர் வளர்ச்சி நிதி, பொது நிதி மூலம் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பணிகளைக் குறித்த காலத்தில் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.
யூனியனில் நடக்கும் பள்ளி கட்டடப் பணி, சாலைப் பணி, இதர பணிகளை வரும் 30-ம் தேதிக்குள் தரமாக முடிக்க வேண்டும்.
÷ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 144 கிராமங்களிலும் குடிநீர், சாலை, வடிகால் வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக, குடிநீர்ப் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் விரைந்து தீர்க்க வேண்டும்.
போர்வெல், பைப்லைன் அமைத்து, விரிவாக்கம் செய்து குடிநீர் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை வேண்டும்.
÷கிராமங்களில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் பொது நிதி உள்ளது.
இந்த நிதி மூலம் செயல்படுத்த வேண்டிய அத்தியாவசியப் பணிகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை உரிய காலத்தில் சுத்தம் செய்ய வேண்டும்.
இங்குள்ள சத்துணவு மையங்களில் சரியான நேரத்துக்கு சத்துணவு வழங்கப்படுகிறதா, முட்டை முழுமையாக வழங்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.