கோவை, ஜூலை 23: திமுகவினர் மீது பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குகளைப் போடும் காவல் துறை மீது நடவடிக்கை கோரி மனிதஉரிமை ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை அணுக திமுக வழக்கறிஞர் அணி முடிவு செய்துள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி
ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிங்காநல்லூர் அண்ணா வளாகத்தில் இக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் சட்டத் துறைச் செயலர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் பொங்கலூர் நா.பழனிசாமி (கோவை), என்.கே.கே.பி.ராஜா (ஈரோடு), மு.பெ.சாமிநாதன் (திருப்பூர்), க.ராமச்சந்திரன் (நீலகிரி), சட்டத்துறை இணைச் செயலர்கள் வெ.ரவி, இரா.கிரிராஜன், முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், முன்னாள் எம்பிக்கள் மு.ராமநாதன், க.ரா.சுப்பையன், திமுக வழக்கறிஞர் அணி கோவை மாவட்ட அமைப்பாளர் பி.ஆர்.அருள்மொழி மற்றும் நான்கு
மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
வழக்கறிஞர்களாகப் பணியாற்றி சட்டப்படிப்புடன், தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் நிபந்தனை கொண்டு வந்துள்ளது கண்டனத்துக்குரியது.
இதனால் இளம் வழக்கறிஞர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர். அதோடு, வெளிநாடு வழக்கறிஞர்களும், இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதால் இத் தேர்வை இந்திய பார் கவுன்சில் ரத்து செய்ய வேண்டும்.
பள்ளி மாணவர்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்க திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தது. இத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மாணவர்களின் நிலையை எண்ணிப் பார்க்காமல் மீண்டும் மீண்டும் மேல்முறையீடு என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தை அணுகி
பிடிவாதப் போக்கோடு நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது.
திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் காவல் துறை மூலமாக பொய் வழக்குகளை அரசு போடுவது கண்டனத்துக்குரியது. இவ் வழக்குகளைத் தொடரும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமை ஆணையம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரிடம் முறையீடு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.