ஈரோடு, ஜூலை 23: ஆலைக்கழிவுகளினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க உயர்நீதிமன்ற உத்தரவை அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்துசாமி, செயலாளர் முனுசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சி.காமராஜிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
÷ஈரோடு மாவட்டத்தில் சாய, தோல் தொழிற்சாலைகள் மற்றும் பெருந்துறை சிப்காட், பவானிசாகர் பகுதியில் பவானி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளிவரும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தொழிற்சாலை வளாகத்தில் தேக்கி வைக்கின்றனர். இதை வெளியேற்றாமல் ஆழ்குழாய் கிணறுகளில் விடுகின்றனர்.÷இதனால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் முழுமையாகப் பாதிப்படைகிறது. இந்த ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினாலும் அவ்வளவு எளிதில் இதுபோன்ற முறைகேட்டைக் கண்டுபிடிக்க முடியாது.
÷மேலும் காகித ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அப்படியே நேரடியாக பவானி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதன் மூலம் பவானி ஆற்றில் மட்டுமின்றி அது கலக்கும் காவிரி ஆறும், காலிங்கராயன் வாய்க்கால் நீரும் பாதிப்படைகிறது.
÷இதேபோன்று ஈரோடு மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடைக் கழிவு நீரும் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக காலிங்கராயன் வாய்க்கால், பெரும்பள்ளம் ஓடை, அணைக்கட்டு போன்ற நீர் நிலைகளில் கலக்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சாய, தோல் ஆலைகள் தொடர்ந்து கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுகின்றனர்.
அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் குடிநீரைப் பாதுகாக்கவும், பாசன பூமிகளைப் பாதுகாத்து விவசாயத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
÷இக்கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் வட்டங்களில் பிரசார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.