ஈரோடு, ஜூலை 23: மின் கட்டண அட்டையை மீட்டர் அருகில் வைக்க வேண்டும் என மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
÷ஈரோடு மின் மண்டல தலைமைப் பொறியாளர் வி.மனோகரன் தெரிவித்தது: குறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 30 நாட்கள் மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்யும் முறை கடந்த கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது. மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டண அட்டையை மீட்டருக்கு அருகில் வைக்க வேண்டும்.
இத்திட்டத்தில் மின்நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தைந்க் கணக்கீடு செய்த 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இம்முறையில் மாதம் முழுவதும் வேலை நாட்களில் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் மின்கட்டணம் செலுத்தலாம். இதன் மூலம் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டு எளிதாக மின் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஈரோடு மண்டலத்தில் உள்ள 371 பிரிவு அலுவலகங்களில் எங்கு வேண்டுமானாலும் செலுத்தும் வசதி கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. மேலும் பொதுமக்களின் வசதிக்காக மின்கட்டணங்களை இணையதளம் மூலமாகவும், அஞ்சல் நிலையங்களிலும் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதிகளை மின் நுகர்வோர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.