ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவியா?

கோவை, ஜூலை 23: திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு, செயல் தலைவர் பதவி அளிப்பது குறித்து செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது. திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியைப்  பலப்ப
Published on
Updated on
2 min read

கோவை, ஜூலை 23: திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு, செயல் தலைவர் பதவி அளிப்பது குறித்து செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது.

திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியைப்  பலப்படுத்த ஸ்டாலினை செயல் தலைவர் ஆக்க வேண்டும் என்றும், அதை பொதுக்குழுவில் அறிவிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கோரி வந்தனர்.

இதனால் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக்குழுவில் அதுகுறித்த அறிவிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பதற்கு, தென்மண்டல அமைப்புச் செயலரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேலும் பரபரப்பு கூடியது. மேலும் அவர் செயற்குழு, பொதுக்குழுவில் பங்கேற்கமாட்டார் என்ற பேச்சும் அடிபட்டது. இந்நிலையில் தலைமை அறிவுறுத்தியதையடுத்து செயற்குழுவில் அழகிரி பங்கேற்றார்.

சனிக்கிழமை மாலை 4.30-க்குத் தொடங்கிய செயற்குழுக் கூட்டம் இரவு 8.15 வரை நீடித்தது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் க.அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், முதன்மைச் செயலர் ஆர்க்காடு நா.வீராசாமி, தலைமை நிலையச் செயலர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலர்கள் பரிதி இளம்வழுதி, எஸ்.பி. சற்குணபாண்டியன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். எதிரே அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் செயற்குழு உறுப்பினர்கள் இருந்தனர்.

செயற்குழுக் கூட்டத்தை புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க மட்டும் 10 நிமிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டச் செயலர் பொங்கலூர் நா.பழனிசாமியின் வரவேற்புரையைத் தொடர்ந்து, கருணாநிதி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

 "கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் சிலர், அவருக்கு செயல் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தலைவர் கருணாநிதி இருக்கும்வரை அவர் தான் திமுக தலைவர். வேறுயாருக்கும் அப்பதவிக்கு இடமில்லை எனக் கூறிய பொதுச் செயலர் அன்பழகன், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக்குழுவிலும் இதுகுறித்து யாரும் பேசக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார். அதை துரைமுருகன் வழிமொழிவதாகக் கூறினார்' என்று செயற்குழுவில் பங்கேற்ற நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் திமுகவின் தோல்விக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் விசுவாசிகளுக்கு எம்.பி. பதவிகள் அளிக்கப்படுவதில்லை என்றும் பேசியுள்ளார். கட்சிக்கும்-தொண்டர்களுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது.தொகுதிக்குழு அமைப்பது தேவையற்றது. கட்சி அமைப்பை வலுப்படுத்த மீண்டும் ஆட்சிமன்றக் குழு கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். திமுகவினர் மீது தொடரப்படும் நிலப்பறிப்பு வழக்கு குறித்து கட்சித் தலைமை கண்டனம் தெரிவிக்காதது குறித்தும் செயற்குழுவில் பேசிய பலரும் வருத்தம் தெரிவித்ததாக அவ்வட்டாரங்கள் கூறின.

செயற்குழுவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், கட்சியைப் பலப்படுத்துவது, அதற்காக எத்தகைய மாற்றங்களைச் செய்யலாம் என்பது குறித்தே செயற்குழுவில் பேசப்பட்டது.

காங்கிரஸ் - திமுக உறவு குறித்தெல்லாம் பொதுக்குழுவில்தான் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

ஸ்டாலினுக்கு புதிய பதவி கொடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டதா எனக் கேட்டதற்கு, அதைப் பற்றியெல்லாம் பேசவில்லை. பொதுக்குழுவில் அனைத்து முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.