கோவை, ஜூலை 23: கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளில் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. நரசீபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் மா.கருணாகரன், ஊராட்சியின் வரவு- செலவு கணக்குகளை தணிக்கை செய்து, பொதுக் கழிப்பிடம், மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
÷ஊராட்சிகளில் ஆண்டுக்கு 4 முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
கடந்த மே 1-ம் தேதி நடத்தியிருக்க வேண்டிய கிராம சபைக் கூட்டம், சட்டப் பேரவைத் தேர்தல் காரணமாக அப்போது நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக சனிக்கிழமை நடைபெற்றது.
÷கோவை மாவட்டத்தில் உள்ள 229 ஊராட்சிகளில், 228-ல் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தாத்தூர் ஊராட்சியில் மட்டும் கிராம சபைக் கூட்டம் கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியர் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று ஆட்சியர் மா.கருணாகரன் உத்தரவிட்டதன் பேரில் துணை ஆட்சியர்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனர். சோமையம்பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம் பங்கேற்றார்.
÷நரசீபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் கருணாகரன் பங்கேற்றார்.
இந்த ஆண்டு ஜனவரி- ஜூன் மாதம் வரையிலான ஊராட்சியின் வரவு- செலவு, குடிநீர், மின் வசதிக்காக செய்யப்பட்ட செலவினங்கள், மூலதன செலவுக் கணக்குகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
÷மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டுவரும் பணிகள் குறித்து பயனாளிகளிடம் அவர் கேட்டறிந்தார். இத் திட்டத்தில் வரும் 2011-12ம் ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். சமூகத் தணிக்கை குழுக்களின் பதிவேடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.
÷பராமரிக்கப்படாமல் இருந்த பொதுக் கழிப்பிட்டத்தைப் பார்வையிட்ட ஆட்சியர், 15 தினங்களுக்கு அதைச் செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார். ஊராட்சி ஒன்றிய மருத்துவனையையும் கருணாகரன் ஆய்வு செய்தார்.
÷மலையடிவாரப் பகுதியான இந்த ஊராட்சியில் 5 வயது மற்றும் அதற்குக் கூடுதலாக 245 குழந்தைகள் இருப்பதை அறிந்த ஆட்சியர், அக்குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனரா, ரேஷன் கடைகளில் பொருள்கள் சரிவர விநியோகம் செய்யப்படுகிறதா என்றும் ஊர் மக்களிடம் கேட்டறிந்தார்.
÷ஊராட்சிகளின் உதவி இயக்குநர் எம்.ஜெயராமன், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.சந்திரசேகரன், ராணி, நரசீபுரம் ஊராட்சித் தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் ரத்தினசாமி மற்றும் ஊர் மக்கள் இதில் பங்கேற்றனர்.