அரசு நடவடிக்கைக்கு வரவேற்பு: ஆக.4, 5 தொடர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

திருப்பூர், ஜூலை 30: சாய ஆலை பிரச்னையை தீர்க்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து, ஆகஸ்ட் 4, 5ம் தேதிகளில் திருப்பூரில் நடத்த இருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைப
Published on
Updated on
1 min read

திருப்பூர், ஜூலை 30: சாய ஆலை பிரச்னையை தீர்க்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து, ஆகஸ்ட் 4, 5ம் தேதிகளில் திருப்பூரில் நடத்த இருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைப்பதென திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

 கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள திருப்பூர் சாய, சலவை ஆலைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்திட இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு நேரடி பேச்சு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் ஜூலை 22ல் மனித சங்கிலி போராட்டமும், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு சார்பில் புதன்கிழமை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

 அதன்தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 4ம் தேதி அனைத்து கட்சி சார்பிலும், 4, 5ம் தேதிகளில் தொழில் பாதுகாப்புக்குழு சார்பிலும் தொடர் வேலைநிறுத்தம் நடத்துவது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருப்பூர் தொழில் துறையினர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் வியாழக்கிழமை பேச்சு நடத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்த திருப்பூர் சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா கடனும், விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை ரூ.18.38 கோடியையும் வழங்க உத்தரவிட்டார்.

 அரசின் இந்த உத்தரவை வரவேற்று அனைத்து கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

 டெக்மா தலைவர் கே.பி.கோவிந்தசாமி திருப்பூரில் சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசியது:  அரசின் உத்தரவை வரவேற்று வருகிற 4, 5ம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தாற்காலிக ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுதவிர, இந்த உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொண்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொழில் துறையினர், தொழிற்சங்கங்கள், விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.அண்ணாதுரை, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.நாகராஜன் மற்றும் ஒர்க்ஸ் ஷாப் சங்கம், நிட்மா, சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கம், பனியன் வியாபாரிகள் சங்கம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.