உதகை, ஜூலை 30: நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்த உரிய விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி, அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
÷இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தது:
நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் கட்டடப் பணிகளுக்காகவும், விவசாயப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டுமெனில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜேசிபி, பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினரிடம்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பலர் உரிய அனுமதி பெறாமல் இயந்திரங்கள் இயக்கப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, கடந்த மாதம் 18-ம் தேதி இயந்திர உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்த விரும்புவோர் மாவட்ட ஆட்சியருக்கு இயந்திரங்கள் பயன்படுத்தவிருக்கும் நிலம், சர்வே எண், எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது ஆகிய விவரங்களுடன் 15 நாட்கள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியருக்கு புல தணிக்கைக்காக அனுப்பப்படும். பின்னர், கோட்டாட்சியர் வட்டாட்சியரிடமிருந்து அறிக்கை பெற்று, தனது பரிந்துரையுடன் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வார காலத்துக்குள் அனுப்புவார்.
பரிந்துரை பேரில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தேவையான நாட்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும். பிற மாவட்டம், மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்தின் வழியாக இயக்கப்படும் இயந்திரங்கள் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் பணிகள் ஏதும் மேற்கொள்ள வேண்டியிருப்பின் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுரைகள் வழங்கப்படும். மாவட்டத்தில் பணிகள் ஏதுமின்றி உள்ள இயந்திரங்களின் நடமாட்டத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணிக்க வேண்டும்.
எனவே, நீலகிரி மாவட்ட பொதுமக்கள் தங்களது சொத்துகளை பராமரிப்பதற்காக இந்திரங்களை பயன்படுத்த வேண்டுமெனில், உரிய விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உரிய அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும். தடையை மீறி இயக்கப்படும் இயந்திரங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.