உதகை, பிப். 10: தமிழக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 13-வது மாநில அமைப்பு தினக் கூட்டம் மற்றும் நீலகிரி மாவட்ட 4-வது அமைப்பு தினக் கூட்டம் ஆகியவை உதகையில் இம்மாதம் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட மையத் தலைவர் சஞ்சீவிராஜ் மற்றும் மாவட்ட செயலர் திவாகரன் ஆகியோர் தெரிவித்துள்ளது:
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 13-வது மாநில அமைப்பு தினக் கூட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் 4-வது அமைப்பு தினக்கூட்டம் ஆகியவை இம்மாதம் 13-ம் தேதி உதகையில் உள்ள சங்க கட்டடத்தில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு பிரச்னைகள் மற்றும் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இதில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். எனவே, நீலகிரி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சங்கத்தின் உறுப்பினர்களும் பங்கேற்று பயனடைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.