சென்னிமலை, பிப். 10: பள்ளிகள் மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டும் என பேராசிரியர் ஞானசம்பந்தன் தெரிவித்தார்.
பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை அறக்கட்டளைத் தலைவர் எஸ்.கே.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மதுரை தியாகராஜர் கல்லூரி பேராசிரியர் முனைவர். கு.ஞானசம்பந்தன் பேசியது: உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாரதத்தில் பாரம்பரியமாக பண்பாடும், ஒழுக்கமும் காக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இலக்கியம், பண்பாடு, ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
11 மொழிகளைக் கற்று அறிந்த பாரதி தமிழ் மொழி போல் சிறந்த மொழி வேறு இல்லை என்றார். ஆனால் இன்று உறவுகளைக் கூட ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உள்ளது. தமிழரின் கலாசாரமும், பண்பாடும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து
வருகிறது.
பள்ளிகள், குழந்தைகளுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும். திருக்குறளை மதிப்பெண்களுக்காக இல்லாமல் வாழ்க்கைக்காக படிக்க வேண்டும். ஒழுக்கமும், பண்பாடும் வளர குழந்தைகளுடன் பெற்றோர்கள் தினமும் சிறிது நேரமாவது கலந்துரையாடுவதுடன் ஒழுக்கநெறி நிறைந்த கதைகளை சொல்லித்தர வேண்டும் என்றார்.
அறக்கட்டளை துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், இணைச் செயலர் எஸ்.கே.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.